Monday, August 13, 2012

மாண்பு மிகு மந்திரி

மந்திரியாகி விட்டாலே சங்கடம்தான். இந்த மக்களுக்கு இலவசமாக எவற்றையாவது கொடுத்தாக வேண்டும். அதே சமயம் அவை மற்ற்வர்கள் முன்பே கொடுத்ததாக இருக்கக் கூடாது. அதனால் நான் நிறைய யோசனை செய்து, இதுவரை யாரும் செய்யாத, மக்களுக்கு உண்மையிலேயே பயன்படக் கூடிய சில இலவசத் திட்டங்களை என் ம்னதுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறேன்.

முதலில் மக்களுக்கு வேண்டியது சோறு. அடேடே, அதற்குள் அவசரப்பட்டு, எல்லோருக்கும் இலவசமாகச் சோறு போடப் போவதாக முடிவு செய்து விடாதீர்கள். இன்றைய நமது நாடு என்ன அந்தக் காலத்துச் சோறுடைத்த சோழ நாடா, அல்லது ஆனை கட்டிப் போரடித்த தென்பாண்டிச் சீமையா? தற்போதைய வளர்ச்சி விகிதப்படி, நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அதுவரையில் நம் மக்கள் வெறும் வயிற்றோடு எப்படி இருக்க முடியும்? அதனால், ஏழை மக்கள் தங்கள் காய்ந்த வயிற்றில் போட்டுக்கொள்ள வசதியாக, 'இலவச ஈரத்துண்டு வழங்கும் திட்டம்'தான் என் முதல் திட்டமாக இருக்கும்!

ஈரத்துண்டுகளுக்கு நான் எங்கே போவேன் என்று யாரும் யோசிக்க வேண்டாம். கான்ட்ராக்ட் மூலம் காய்ந்த துண்டுகளை வாங்கி, மந்திரியானவுடன் என் வீட்டு முகப்பில், சில (நூறு) கோடி ரூபாய்களில்  நான் கட்டப்போகும், 24 மணி நேரமும் இயங்கும் வண்ண நீரூற்றிலிருந்து வரும் நீரில் அவற்றை நனைத்துத்தான் மக்களுக்கு விநியோகிப்பேன். முதல் சில துண்டுகளை நான் விநியோகித்தவுடன், மற்ற்வற்றை என் வீட்டில் இருப்பவர்களும், கட்சிக்காரர்களும் அரசு அதிகாரிகளும் விநியோகிப்பார்கள்.  அது மட்டும் இன்றி, ஏழை மக்கள், தேவைப்படும்போதெல்லாம் என் வீட்டுக்கு வந்து சிறு கட்டணம் செலுத்தித் தங்கள் காய்ந்த துண்டுகளை மீண்டும் ஈரப்படுத்திக்கொண்டு போகலாம். நான் மந்திரியாக இல்லாவிட்டாலும், மக்கள் இந்ச்த சேவையை என் வீட்டில் பெறலாம். அவர்களுக்கு இந்தச் சேவை ஆயுள் முழுவதும் தேவைப் படுமே!

இடுப்பில் போட்டுக்கொள்ள ஈரத்துண்டு கிடைப்பதால், மக்கள் எப்போதும் பட்டினியாகவே இருந்து விட முடியுமா என்ன? ரேஷனில் போடும் அரிசியின் அளவும் குறைந்து, விலையும் ஏறி விட்டதே என்று வருந்துபவர்களின் குறையைப் போக்குவதற்காக, ஒரு இலவச அரிசித் திட்டமும் உண்டு. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 30 கிலோ அரிசி இலவசமாக - ஆமாம், இலவசமாகத்தான் - வழங்கப்ப்படும். ரேஷன் கடைகளின் இயல்பான பணிக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக, இந்த இலவச அரிசி ஒவ்வொரு மாதமும் முப்பத்திரண்டாம் தேதி மட்டும் வழங்கப்படும்!

உணவுப் பிரச்னையைத் தீர்க்க நீண்ட காலத் திட்டங்கள் தேவை என்பதில் எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு. நமது வயிற்றின் கொள்ளளவைக் குறைப்பதன் மூலம், நாம் உண்ணும் உணவின் அளவு குறைந்து நிறைய உணவுப் பொருட்கள் மிச்சப்படும். இதனால் அனைவருக்கும் உணவு கிடைக்கும். உணவு உற்பத்தியை அதிகரிக்காமலேயே, அனைவருக்கும் உணவளிக்க வழி வகுக்கும் இந்தப் புரட்சிகரமான திட்டத்தைச் செயல் படுத்த, நான் பல வெளி நாடுகளுக்குச் சென்று விவரம் சேகரித்த பின், நமது மருத்துவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, ஏழைகளின் வயிற்றின் கொள்ளளவைக் குறைக்க இலவச அறுவை சிகிச்சைத் திட்டம் செயல்படுத்தப்படும். (ஏழைகளிடம் இத்திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல வழக்கம் போல் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். குடும்பக் கட்டுப்பாடு, சத்துணவு போன்ற பணிகளில் ஈடுபட்டு மீதமிருக்கும் நேரத்தில் ஆசிரியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவர்!)

வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடுமையைக் குறைக்கும் விதமாக,வேலையில்லா இளைஞர்களுக்கு இலவச இட்லி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், மாதம் ஒரு நாள் வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு இட்லி வழங்கப்படும். ஒவ்வொரு இட்லியின் மீதும் எங்கள் தலைவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

உணவுக்குப்பின் உடை. என் பிறந்த நாளுக்காகக் கட்சித் தொண்டர்கள் அடிக்கும் போஸ்டர்கள், என் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.(போஸ்டர்கள் ஒட்டத்தான் நிறையத் தடை இருக்கிறதே!) ஆடையில்லாச் சிறுவர்கள் ஒரு நாளாவது போஸ்டர்களை இடையில் சுற்றிக்கொண்டு மானம் காத்துக் கொள்வதுடன், என் பிறந்த நாள் பற்றிய செய்தியையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதைத்தவிர, எனது கட்சிக்காரர்கள் கிழித்துப் போடும் மாற்றுக் கட்சியினரின் கொடிகளும் என் தொகுதி மக்கள் ஆடையாக அணிய ஏதுவாக அவர்களுக்கு வழங்கப்படும்!


உடைக்குப் பின் வருவது உறைவிடம். புதிதாக வீடுகள் கட்டக் காலி இடம் ஏதும் இல்லை என்பதால், சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் ஏழை மக்கள் குடிசை போட்டுக்கொள்ள இடம் ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்படும். அவர்கள் குடிசை போட்டுக்கொள்ளத் தேவையான ஓலை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள், கல், மண் முதலியவை அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும்.(இவ்வாறு இயற்றப்படும் சட்டத்திற்கு யாராவது நீதி மன்றத்தில் தடை வாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல!)

இது தவிர, குடிசைப் பகுதிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டமும் அறிமுகப் படுத்தப்படும். இதற்கு அதிகச் செலவு ஆகும் என்பதால், மூடப்படாத அலுமினியக் கம்பிகள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும். மூடப்படாத மின்கம்பியின் பரிசம் பட்டு யாரும் இறந்து விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மெயின் சுவிட்ச் அணைக்கப்படும். (காலை 6 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை வழக்கம்போல் மின்வெட்டு அமுலில் இருக்கும்!)

கொலை கொள்ளைகள் அதிகரித்து வருவதாக மக்கள் புகார் கூறுவதால், மக்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில், தேவைப்படுபவர்களுக்கெல்லாம்  இலவசமாகக் கத்தி, துப்பாக்கி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்கள் வழங்கப்படும். அத்ற்குப் பிறகு யாரும் போலீசில் எந்தப் புகாரும் கொடுக்க வழி இருக்காது என்பதுடன், போலீஸ் படை முழுவதையும் அமைச்ச்ர்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த முடியும்.

'வாழ விடு, அல்லது சாக விடு' என்பது எங்கள் தலைவர் எங்களுக்கு வழங்கிய தாரக மந்திரம். அவரது அறிவுமொழிக்கேற்ப, சாக விரும்புகிறவர்களுக்கு, விரைவில் செயல் பட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வீரியம் மிகுந்த விஷம் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தற்கொலையைச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால், தற்கொலை செய்து கொள்வதைச் சட்டபூர்வமாக ஆக்கும் விதத்தில் அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி, (மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி இல்லாத நேரங்களில்) மத்திய அரசுடன் போராடுவோம்.

நான் இதுவரை சொன்னதெல்லாம் ஒரு சாம்ப்பிள்தான்.இன்னும் பல 'புரட்சி இலவசத் திட்டங்கள்' என் மனக்கிடங்கில் புதைந்து கிடக்கின்றன. எல்லாவற்றையும் இப்போதே சொல்லி விட்டால், அப்புறம் எல்லாவற்றையும் யாராவது காப்பி அடித்து விடுவார்கள்.

எனவே, மற்ற திட்டங்களை நான் மந்திரியாக ஆன பிறகுதான் வெளியிட உத்தேசம். ஆனால் ஒன்று. நான் மந்திரியாக ஆனால், இலவசத் திட்டங்கள் ஆறாக ஓடிக் கடலாகப் பெருகுவது மட்டும் திண்ணம் என்று மட்டும் என்னால் அறுதியிட்டுக் கூற முடியும்!