Saturday, January 14, 2012

வதந்திகளைப் பரப்புங்கள்!

பொதுவாக இந்தியர்களுக்கு  sense of humour (நகைச்சுவை உணர்வு) குறைவு என்று ஒரு கருத்து உண்டு. இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் நம்முடைய sense of rumour ஐ (வதந்தி ஆர்வம்) யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

குழந்தைகளுக்கு அடுத்தபடியாக நம் நாட்டில் அதிகமாக உற்பத்தியாவது வதந்திகள்தான்.  மின் தட்டுப்பாடு, தொழிலாளர் பிரச்னை, மூலப்பொருள்  பற்றாக்குறை போன்ற எவற்றினாலும் உற்பத்தி பாதிக்கப்படாத பொருள் ஒன்று உண்டென்றால், அது வதந்திதான். இதற்கான மூலப்பொருளுக்குப் பஞ்சமே இல்லை (சில சமயம் மூலப்பொருளே தேவைப்படுவதில்லை!) உற்பத்திக்குத் தேவையான உழைப்பு சம்பந்தப்பட்டவர்களால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. தேவையான சக்தியும் தானே உற்பத்தியாவதுடன், எடுக்க எடுக்கக் குறைவதே இல்லை. சொல்லப்போனால், வதந்தியை உருவாக்கவும், பரப்பவும் பயன்படுத்தப்படும் சக்தியைச் சேமிக்க முடியுமானால், அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி கூடச் செய்யலாம்!

வதந்தித் தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம், கதவடைப்பு எதுவும் கிடையாது. வதந்திகளை உருவாக்குபவர்கள் (producers), விநியோகிப்பவர்கள் (distributors), பரப்புபவர்கள் (dealers), செவிமடுப்பவர்கள் (consumers) ஆகியோரிடையே நிலவும் நல்லுறவு மற்ற தொழில், வர்த்தகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. வேறு எந்தப் பொருளுக்கும் இல்லாத ஒரு  சிறப்பு வதந்திக்கு உண்டு. வதந்தியை நுகர்பவரே (consumer) பரப்புகிறவராகவும் (distributor) ஆகும்  வாய்ப்பைப்  பெறுகிறார். வேறு  எந்த  நுகர்வோருக்கும்  இந்தச்  சலுகை  கிடைக்காது. இந்தச் சலுகையினால், நுகர்பவர் மனத்திருப்தி என்கிற லாபத்தைப் பெறுகிறார்.

தேவையான தருணங்களில் உற்பத்தியைப் பெருக்க, வதந்தித் தொழிற்சாலைகள் தயங்குவதே இல்லை.

முன்பெல்லாம் வதந்தி என்பது அருவருக்கத்தக்கதாகக் கருதப் பட்டது. ஆனால் இப்போது அப்படி  இல்லை. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் (எந்த மொழிப் பத்திரிகையானாலும் சரி), அதில்  ஒரு சில வதந்திகளாவது கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆனால் வதந்திகள் அங்கே பலவிதமான கௌரவமான பெயர்களில் வெளியிடப்படுகின்றன. 'கிசுகிசு,' 'காதில் விழுந்தவை,' 'ரகசியம் பரம ரகசியம்,' 'கேள்விப்படுகிறோம்' போன்ற பகுதிகள் இல்லாத பத்திரிக்கைகளைப்  பார்ப்பது அரிது.  செய்திப் பத்திரிகைகளும் சளைத்தவை அல்ல. அவற்றில், 'அதிகாரபூர்வமற்ற தகவல்கள்,' 'எங்களுக்குக்  கிடைத்த தகவல்படி,' 'பெயர் சொல்ல விரும்பாத ஒரு தலைவர் அல்லது அதிகாரி கூறியது,'  என்ற  பலே வடிவங்களில் வதந்திகள் பிரசுரமாகின்றன.  

இவற்றிலிருந்தெல்லாம்  நாம்  தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வதந்திகளை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்! 

வதந்திகள் வாழ்க்கைக்குச் சுவையூட்டுகின்றன, உற்சாகமளிக்கின்றன, சுவாரஸ்யம் தருகின்றன. வதந்திகள் இல்லாவிட்டால் வாழ்க்கை மிகவும் டல் அடிக்கும். பொதுவாக மனிதர்களின்  கவனம் கூர்மையடைவதே வதந்திகளைக் கேட்கும்போதுதான். வதந்திகள் கவனத்தில் பதிவதுபோல் செய்திகள் பதிவதில்லை அல்லவா?

வதந்திகளால்   சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதில்லையா என்ற கேள்வி எழலாம். நியாயமான கேள்விதான். இதற்கு நியாயமான பதிலும் உண்டு. ஆமாம். உண்மைதான். அதற்கு என்ன செய்ய முடியும்? வதந்திகளைக் கேட்டு ரசித்து மகிழ்பவர்களோடு ஒப்பிட்டால், வதந்திகளால் பாதிக்கப்படுபவர்கள் மிகச் சிலர்தான். எனவே ஜனநாயக மரபுகளின்படி, பெரும்பான்மையோருக்கு எது உகந்ததோ அதை ஏற்றுக்கொள்வதுதானே  வழி? எனவே பாதிக்கப்படுபவர்களின் பலவீனமான எதிர்ப்புப் குரலை அலட்சியம் செய்ய வேண்டியதுதான்!